சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் பயன்பாட்டுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் ரூ.6 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் பயன்பாட்டுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், எந்த வேட் பாளருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் உறுதி செய்யும் விவிபேட் இயந்திரம் என 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் தேர்தலின்போது பயன்படுத்தப்படுகிறது.
இந்த இயந்திரங்கள் அனைத்தும் தற்போது சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறைஎண் 8 மற்றும் அறை எண் 12 ஆகிய பாதுகாக்கப்பட்ட அறைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் தனி கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:
தேர்தலின்போது வாக்குப் பதிவு முடிவுற்றதும், அதனை சில ஆண்டுகள் வரை வாக்குப் பதிவுடன் பாதுகாத்து வைக்கவும், அதன் பின்னர் இயந்திரங்களை அடுத்த தேர்தலுக்காக பாதுகாத்து வைத்திடவும், இயந்திரங்கள் பாதுகாப்பு அறை தேவைப் படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க மாவட்டந்தோறும் தனி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் ரூ.6 கோடியில் தரைதளத்துடன் கூடிய 3 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடைந்ததும் ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இனி புதிய கட்டிடத்திலேயே நடத்தப்படும். கட்டுமானப் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். தேர்தல் பிரிவு அலுவலகம் வழக்கம்போல, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.