Regional03

சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க இளைஞர் தஞ்சை வருகை

செய்திப்பிரிவு

சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி, மேற்குவங்க இளைஞர், சைக்கிள் பயணமாக, நேற்று தஞ்சாவூருக்கு வந்தார். அவரை போலீஸார் வரவேற்று உற்சாகப்படுத்தினர்.

மேற்குவங்க மாநிலம் பலூர்காட் பகுதியைச் சேர்ந்தவர் மதாய் பவுல்(27). ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், சாலை விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி பகுதியில் இருந்து சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார்.

அங்கிருந்து, ஒடிசா, தெலங்கானா, ஆந்திர மாநிலங்கள் வழியாக தமிழகத்துக்கு வந்த அவர், சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகள் வழியாக நேற்று தஞ்சாவூருக்கு வந்தார். அவரை தஞ்சாவூர் நகர டிஎஸ்பி பாரதிராஜன் தலைமையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், உதவி ஆய்வாளர் ஜெயந்தி, போக்குவரத்துக் காவலர் ரமேஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், மதாய் பவுலை உற்சாகப்படுத்தும் விதமாக, அவரது பயணத்துக்கான உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மதாய் பவுல் கூறியது: பொதுமக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் செல்வதால்தான், அதிகளவில் விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வலியுறுத்தி தொடங்கிய எனது சைக்கிள் பயணத்துக்கு, தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நாளொன்றுக்கு 130 கி.மீ தொலைவுக்கு பயணம் செய்து, இதுவரை 5 ஆயிரம் கி.மீ நிறைவு செய்துள்ளேன். தொடர்ந்து, தமிழகத்தில் திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரிக்குச் சென்று, அங்கிருந்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கத்தில் எனது 3 மாத பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன் என்றார்.

SCROLL FOR NEXT