கரோனா ஊரடங்கால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலத்தை நிகழாண்டு ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மீனவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, அப்பேரவையின் மாநில பொதுச் செயலாளர் ஏ.தாஜூதீன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக 5 மாதங்கள் தொழில் செய்ய முடியாமல் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, தற்போதும் பாதிப்பிலிருந்து மீளமுடியாத நிலையில் இருந்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம்.
ஏற்கெனவே, 5 மாதங்கள் தொழில் இல்லாமல் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 2 மாதங்கள் தடைக்காலத்தை அமல்படுத்தினால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, நிகழாண்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவதை தமிழக முதல்வர் நிறுத்திவைக்க வேண்டும்.
மானிய விலையில் வழங்கப்படும் டீசலால் மட்டுமே மீனவர்கள் தற்போது ஓரளவுக்கு தொழில் செய்து வருகின்றனர்.
ஆனாலும், நண்டு, இறால், கணவாய் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்கள் தற்போது ஏற்றுமதி செய்யப்படாததால், மீனவர்கள் தொடர் நஷ்டத்தில் இருந்து வருகின்றனர்.
எனவே, மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிநீக்கம் செய்யப்பட்ட டீசல் 1,500 லிட்டர் என்பதை, 3,500 லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.