தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் 3 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அங்கு பணிபுரியும் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 25 பேருக்கு நேற்று காலை கரோனா தடுப்பூசி போடப்பட்டது. பின்னர், அவர்கள் தங்கள் பணியில் ஈடுபட்டனர். தடுப்பூசி போடப்பட்ட 3 மணி நேரத்துக்குப் பின், மருத்துவப் பணியாளர் மனோகரன்(54), சுகாதாரப் பணியாளர்கள் சாந்தி(48), விமலாமேரி(53) ஆகியோர் திடீரென மயக்கம் அடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு இயல்புநிலைக்கு திரும்பிய 3 பேரும், தங்களின் பணியைத் தொடர்ந்தனர்.
இதற்கிடையே, பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் வருகைப் பதிவேட்டில் வருகையை பதிவு செய்ய முடியாது என்றும், கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டதால்தான், 3 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனால்தான் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது என சக ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.
தடுப்பூசி காரணமல்ல
29-வது நாளான நேற்று ஏற்கெனவே முதல் டோஸ் எடுத்துக்கொண்டவர்களுக்கு 2-வது டோஸும், இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு முதல் டோஸும் தடுப்பூசி போடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பணியிலிருந்தபோது மயக்கமடைந்த 3 பணியாளர்களை பரிசோதனை செய்து பார்த்ததில், அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை இருந்ததால்தான், மயக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. கரோனா தடுப்பூசிக்கும், அவர்கள் மயக்கமடைந்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தடுப்பூசிக்கு பிந்தைய ஒவ்வாமையும் அவர்களுக்கு ஏற்படவில்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்திவிட்டனர். யாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என்றார்.