தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் (34). இவர், கப்பலில்வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள தினேஷ், கடந்த 8-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், தினேஷ் வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி வடபாகம் போலீஸாருக்கு நேற்று தகவல் அளித்தனர். போலீஸார் விரைந்து வந்து பார்வையிட்டனர். வீட்டினுள் பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்த பின்னரே திருடுபோன பொருட்கள் குறித்த முழு விவரம் தெரியவரும் என, போலீஸார் தெரிவித்தனர்.