தண்டராம்பட்டு அருகே கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த முகமூடி கும்பல், விவசாயி குடும்பத்தினரை தாக்கிவிட்டு தப்பியோடியது.
தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மெய்யூர் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி தர்(51). இவர், தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, 7 பேர் கொண்ட முகமூடி கும்பல், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது. பின்னர் அந்த கும்பல், தர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியது.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். இதையறிந்த அந்த கும்பல், அங்கிருந்து தப்பித்து ஓடியது. அந்த சமயத்தில் கும்பலைச் சேர்ந்த ஒருவரது கைக்கடிகாரம் கீழே விழுந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வாணாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறும் போது, "தர் வீட்டுக்குள் நுழைந்து நடத்தப்பட்ட தாக்குதல் முன்விரோதமா? அல்லது கொள்ளை முயற்சியா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.