Regional01

கரூரில் அமராவதி ஆறு உட்பட 10 இடங்களில் தேசிய பசுமை தீர்ப்பாயக் குழு தண்ணீர் மாதிரி சேகரிப்பு

செய்திப்பிரிவு

கரூர் அமராவதி ஆறு மற்றும் கிளை வாய்க்கால்கள் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய பசுமை தீர்ப்பாயக் குழுவினர் ஆய்வுக்காக தண்ணீர் மாதிரிகளை சேகரித்தனர்.

கரூர் அமராவதி ஆறு மற்றும் கிளை வாய்க்கால்களில் சாயக்கழிவு மற்றும் கரூர் நகராட்சி கழிவுநீர் கலப்பது தொடர்பாக அனைத்துத் துறையினர் அடங்கிய குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கரூர் அமராவதி ஆறு, கிளை வாய்க்கால்கள், கரூர் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில் அனைத்துத்துறையினர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கரூர் அமராவதி ஆற்றில் 4, இரட்டை வாய்க்காலில் 3, செல்லாண்டிபாளையம், ராயனூர் ராஜவாய்க்கால்களில் தலா 1, கரூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் 10 இடங்களில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி கார்த்திகேயன், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கே.ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை அலுவலர் முத்துசாமி, நகராட்சி பொறியாளர் நக்கீரன் அடங்கிய குழுவினர் தண்ணீர் மாதிரிகளை நேற்று சேகரித்தனர்.

ஆய்வு அறிக்கை மற்றும் தண்ணீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

SCROLL FOR NEXT