முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சேலம் நெடுஞ்சாலை நகர் மற்றும் சிலுவம்பாளையத்தில் உள்ள முதல்வரின் வீடுகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.
சோதனையில், வெடிகுண்டு இல்லை என்பது தெரிந்தது. விசாரணையில், தொலைபேசியில் தொடர்பு கொண்ட அலைபேசி எண் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த மில் தொழிலாளி சேகருடையது எனத் தெரிந்தது.
இதையடுத்து, சேகரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சேகருடன் பணிபுரியும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறைச் சேர்ந்த அன்பழகன் (47) என்பவர் சேகரின் அலைபேசி மூலம் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை சேலம் பூலாம்பட்டி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்