திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவன், சிறுமி அடுத்த டுத்து மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேபாளத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (40). இவரது மனைவி ஆர்த்தி (35). இவர்களுக்கு பிரவீன் (7), பிரியங்கா (4), அனில் (3) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். கடந்த சில மாதத்துக்கு முன் திருப்பூரில் 15-வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் பகுதியில் தங்கி வசித்து வந்தனர்.
அங்குள்ள உணவகத்தில் தம்பதி பணியாற்றி வருகின்றனர். கடந்த 8-ம் தேதி பிரவீனுக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
மகன் இருந்த துக்கத்தில் பெற்றோர் இருந்த நிலையில், அன்றைய தினம் இரவு சிறுமி பிரியங்காவுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத் துச்சென்று பரிசோதித்தபோது, உடல்நிலை மோசமாக இருப்பதாகக்கூறி சிறுமியை சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சந்தோஷ் மருந்து வாங்கிக் கொண்டு, சிறுமியுடன் வீட்டுக்கு வந்துவிட்டார். நள்ளிரவில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிறுமி உயிரிழந்தார். சிறுமியின் உடலையும் மீட்டு திருப்பூர் அரசு தலைமைமருத்துவமனைக்கு 15-வேலம் பாளையம் போலீஸார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார்கூறும்போது, ‘‘தம்பதி இருவரும் துரித உணவகத்தில் வேலை செய்ததால், அங்கு மீதமாகிய உணவுகளை கடந்த 7-ம் தேதி இரவு குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். இந்த உணவே விஷமாக (ஃபுட் பாய்சன்) மாறியிருக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.