Regional01

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தியதால் கரூரில் அங்கன்வாடி ஊழியர்கள்உதவியாளர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

கரூரில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கட்டாயப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் தாந்தோணிமலையில் உள்ள தாந்தோணி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில், தாந்தோணி வட்டார அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள் எனக் கூறி, அவர்களை நேற்று வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலக ஊழியர்கள் அழைத்துள்ளனர்.

இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் நேற்று வந்தபோது, அங்கு கரோனா தடுப்பூசி போடுவதற்காக மருத்துவக் குழுவினர் தயாராக இருந்துள்ளனர். மேலும், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனக் கூறியதால், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

‘‘நாங்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு பொறுப்பேற்று அதிகாரிகள் கடிதம் எழுதி தர வேண்டும்’’ என ஊழியர்கள் கேட்டுள்ளனர். அதற்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மறுத்ததுடன், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததற்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி தர வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை வற்புறுத்தியுள்ளனர்.

இதற்கு, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க செயலாளர் சாந்தி கூறியது:

கூட்டத்துக்கு வாருங்கள் என அழைத்து, கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்துகின்றனர். வயது, உடல்நிலை, குடும்ப சூழலால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிடில், நாங்கள் பணி செய்யும் பகுதியில் யாருக்கு கரோனா ஏற்பட்டாலும் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு எனக் கூறி மிரட்டுகின்றனர். எனவே, யாரையும் கட்டாயப்படுத்தாமல் விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT