கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் கொத்தடிமை ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) கார்த்திக்கேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொதுபரிமளம், உதவி ஆணையர்(அமலாக்கம்) இராஜசேகரன், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் ஜெரால்டு,வாசுதேவன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கொத்தடிமை தொழிலாளர் முறை என்பது, ஒரு தொழிலாளர் பிரச்சினை மட்டுமல்ல, கடுமையான மனித உரிமை மீறல் ஆகும். 1976-ல் கொத்தடிமை தொழிலாளர் முறை சட்ட விரோதமென தடை செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, ‘கொத்தடிமை தொழிலாளர் முறை’ என்பது ஒரு வகையான கட்டாய தொழிலாளர் முறையாகும். கடனுக்காக கட்டாய தொழிலாளர் ஆக்குதல் அல்லது வேறு சமூக கட்டுபாட்டின் காரணமாக தொழிலாளர்கள் இம்முறையின் கீழ் கட்டுப்படுத்தப்படுவதுண்டு.
கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க, தமிழக அரசால் மாநில அளவிலான செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் கீழ் கொத்தடிமைத் தொழிலாளர்களை கண்டறிதல்,விடுவித்தல், அவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது. கடலூரில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு, தொழிலாளர் உதவி ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சமூகப்பணியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு 22.09.2018 அன்று இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் உபக்கோட்ட கண்காணிப்பு குழு 18.01.2019 அன்று, சிதம்பரம் உபக்கோட்ட கண்காணிப்பு குழு 26.07.2019 அன்று, விருத்தாசலம் உபக்கோட்ட கண்காணிப்பு குழு08.08.2019 அன்று உருவாக்கப்பட்டு தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர் முறையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப் பிடத்தக்கது. தங்கள் பகுதியில் யாரேனும் கொத்தடிமை முறைதொடர்பாக புகார் தர விரும்பினால், உடனே மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தை அணுகலாம். தகவல் தருவோர் பெயர் விவரங்கள் வெளியிடப்பட மாட்டாது.