கோபியில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 2331 பேருக்கு வேலைவாய்ப்பிற்கான உத்தரவும், ரூ.13.63 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் தொடங்க கடனுதவியும் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கோபியில் நேற்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அமைச்சர்கள் கூறியதாவது:
முகாமில், 27 ஆயிரத்து 452 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், 236-க்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. 62 மாற்றுத்திறனாளிகள் உட்பட 10 ஆயிரத்து 721 பேர் முகாமில் பங்கேற்றனர்.
இவர்களில், 6 மாற்றுத்திறனாளிகள் உட்பட 2331 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
85 நபர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும், சுய தொழில் செய்ய 40 நபர்களும், அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்காக 188 நபர்களும், திறன் பயிற்சிக்கு 215 நபர்களும் பதிவு செய்துள்ளனர். முகாமில் 50 நபர்களுக்கு ரூ.13.63 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
25 நபர்களுக்கு சுய நிதி மூலம் தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோபி பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு, அதில் 5000 பேருக்கும், கொளப்பலூர் பகுதியில் 7 ஆயிரத்து 500 நபர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
முதல்வர் தொடங்கி வைத்த வேலைவாய்ப்புத்துறையின் இணையதளத்தின் வாயிலாக 3 ஆயிரத்து 281 நிறுவனங்கள், 49 ஆயிரத்து 453 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு செய்துள்ளனர்.
இதுவரை 1 லட்சத்து 6530 வேலைநாடும் இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 15ஆயிரத்து 737-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது, என்றனர்.
முகாமில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கே.வீரராகவ ராவ், கோவை மண்டல இணை இயக்குநர் ஆ.லதா, முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், கோபி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குநர் ம.மகேஸ்வரி, துணை இயக்குநர் ஞானசேகர், மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.