Regional01

கழிநீர் கால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தை மூடாததால் சாலை மறியல்

செய்திப்பிரிவு

கழிவுநீர் கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததைக் கண்டித்து திருச்செங்கோடு நகராட்சி 15-வது வார்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு காட்டுவளவு பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது.

இதனால், அப்பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் நிலவி வந்தது. விபத்து அபாய சூழலும் நிலவியது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைக்கண்டித்து நேற்று அப்பகுதி மக்கள் உட்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் திருச்செங்கோடு வெப்படை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அச்சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கழிவுநீர் கால்வாய் அமைக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பள்ளம் தோண்டப்பட்டது. எனினும், இதுவரை பள்ளம் மூடப்படாமல் உள்ளது. பணியை விரைந்து முடித்து பள்ளத்தை மூட வேண்டும் என மறியலில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். அவர்களை காவல் துறையினர் சமரசம் செய்தும் ஏற்காததால் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

SCROLL FOR NEXT