Regional01

சேலம் மாவட்ட காப்புக் காடுகளில் ரூ.25.20 லட்சத்தில் வன வள மேம்பாட்டுப்பணி

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் உள்ள காப்புக் காடுகளில் ரூ.25.20 லட்சத்தில் வன வள மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் வடக்கு (பாப்பிரெட்டிப்பட்டி), டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி, கல்வராயன், சித்தர்கோயில் வன விரிவாக்க மையம் என 9 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில், வன விலங்குகள் மேம்பாட்டுக்காக, பல்வேறு நடவடிக்கைகள் வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வன விலங்குகள் காப்புக்காடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்கவும், மனித, விலங்கு மோதலை தடுக்கவும் ரூ.25.20 லட்சம் ஒதுக்கீடு (2020-2021-ம் நிதியாண்டில்) செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் மாவட்ட காப்புக் காடுகளில் மனித-வன விலங்கு மோதலைத் தவிர்த்தல், தீவன வளங்களை உருவாக்குவதல், வன விலங்குகளின் வாழ்விடத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, ஏற்காடு சரகத்தில் உள்ள காஞ்சேரி காப்புக்காடு பகுதியில் 10 ஹெக்டேரில் படர்ந்துள்ள உண்ணி மற்றும் களைச்செடிகளை அகற்றி, அப்பகுதியில் வன விலங்குகளுக்கான தீவனப்புற்கள் வளர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒப்புச்சான் மலை காப்புக்காட்டில் ஒரு கசிவு நீர்க்குட்டையும், பச்சைமலை மற்றும் மஞ்சவாடி காப்புக்காடு பகுதிகளில் வன விலங்கு குடிநீர்த் தொட்டி தலா ஒன்று வீதம் அமைக்கப்பட உள்ளன.

மேலும், பெலாப்பாடி மற்றும் பைத்தூர் காப்புக்காடு பகுதிகளில் தலா ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT