கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் வரும் 17-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாநில மாநாடு நேற்று சேலத்தில்நடந்தது. மாநாட்டில், அலுவலக உதவியாளர்கள் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக வரன்முறை செய்திட வேண்டும். கருணை பணி நியமனத்துக்கு ஆட்சியருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் குமரேசன் கூறும்போது, 10 அம்ச கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றவில்லை என்றால்,வரும் 17-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடமுடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்களும் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.