விவசாயிகள் நலன் கருதி பயிர்க் கடனை அரசு தள்ளுபடி செய்துள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரை அடுத்த முதலிபாளையம் பகுதியில் தொடக்கப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டு நடுநிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. இதன், தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறும்போது, "விவசாயிகள் நலன் கருதி பயிர்க் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதுபோன்ற அறிவிப்பை, தேர்தல் நேரங்களில் மட்டும்தான் அரசியல் கட்சிகள் அறிவிப்பது வழக்கம். மாறாக, சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். பள்ளிமாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்பது, நாடே வியந்தவிஷயம். விவசாயிகளின் நலன்கருதி வறட்சி நிலங்களில் குடிமராமத்து பணிகள், அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. இங்கு, தற்போதுதான் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. விருப்பப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று கூறப்பட்டுள்ளதால், பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.
இதைத்தொடர்ந்து பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும், திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும் தொடங்கிவைத்தனர். எம்எல்ஏ-க்கள்ஏ.நடராஜன், கே.என்.விஜயகுமார், வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் இரா.ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.