Regional01

தம்மம்பட்டி ஜல்லிக்கட்டில் 559 காளைகள் பங்கேற்பு காளைகளை அடக்கிய வீரர்களுக்கு வெள்ளிக்காசு பரிசு

செய்திப்பிரிவு

ஆத்தூர் அடுத்த தம்மம்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், 559 காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு வெள்ளிக்காசு, சைக்கிள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆத்தூர் அடுத்த தம்மம்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தது. இதில், பங்கேற்க சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 566 காளைகள் வந்திருந்தன. கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் புருஷோத்தமன் தலைமையில், காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு 559 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதேபோல, தம்மம்பட்டி, உலிபுரம், செந்தாரப்பட்டி, கூலமேடு, கெங்கவல்லி, மல்லியகரை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர். வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மற்றும் உடல்தகுதி பரிசோதனைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

போட்டிக்கு, சேலம் ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். எஸ்பி., தீபா காணிகர், ஆத்தூர் கோட்டாட்சியர் துரை, மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன், எம்எல்ஏ மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டதும், ஆட்சியர் ராமன், கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தார்.

வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர், ஒவ்வொரு காளைகளாக வாடிவாசல் வழியாக மைதானத்துக்கு வந்தன. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில், காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில், மாடுகள் முட்டியதில் சில வீரர்கள் லேசான காயமடைந்தனர்.

வீரர்களின் பிடியில் சிக்காமல் தப்பிய காளைகளின் உரிமை யாளர்களுக்கும், காளைகளை வீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் வெள்ளிக்காசு, சைக்கிள், பாத்திரங்கள் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT