சேலம் நான்கு ரோடு அருகே உள்ள சாமுண்டி வணிக வளாகத்தில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், கள் இறக்க அனுமதி கேட்டு முதல்வருக்கு தபால் கார்டு எழுதும் நிகழ்ச்சி தொடங்கியது. கள்ளுக்கு கொடுக்கும் விடுதலை வரும் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை கொடுக்கும் என கார்டில் கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி மற்றும் நிர்வாகிகள் தபால் கார்டு எழுதி முதல்வருக்கு கடிதம் அனுப்புவதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது:
தமிழகத்தில் 30 ஆண்டுக்கு மேலாக கள் இறக்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு கள்ளுக்கு விடுதலை தரவேண்டும். வரும் தேர்தலுக்கு முன்பாக கள்ளுக்கு உள்ள தடையை நீக்கி, விற்பனை செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக முதல்வருக்கு தபால் மூலமாக கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்பிரச்சினைக்கு முதல்வர் பழனிசாமி, நல்ல தீர்வு காண்பார் என நம்புகிறோம்.
இன்று (6-ம் தேதி ) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா நரசிங்கனூரில் கள் இறக்கி விற்க முடிவு செய்திருக்கிறோம். இதுதவிர மார்ச் மாதம் 13-ம் தேதி ஈரோட்டில் மாநாடு நடத்த முடிவு செய்திருக்கிறோம். இந்த மாநாடு ஒரு திருப்புமுனையாக இருக்கும். வரும் தேர்தலில் வெற்றி தோல்வியை இந்த மாநாடு நிர்ணயிக்கும். இம்மாநாட்டில் கள் ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளனர். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஜவ்வரிசி ஆலைகள் நிறைய உள்ளன. ஆனால், த ற்போது மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலை கிடைக்கவில்லை. கம்போடியாவில் இருந்து ஸ்டார்ச் மாவு இறக்குமதி செய்யப்படுகிறது. இது விவசாயிகளை வயிற்றில் அடிக்கும் நிலையாகும். இதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்.
இதுதவிர விவசாய கமிஷன் பரிந்துரையை மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாய கமிஷன் பரிந்துரையை நடைமுறை செய்தால் விவசாயிகளுக்கு வருமானம் இரட்டிப்பாகும். இவ்வாறு ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.