சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே சாலையில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச் சாலையில் இருந்து கொண்டலாம்பட்டி புறவழிச் சாலைக்கு செல்லும் வழியில் காட்டூர், மணியனூர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இச்சாலைக்கு நடுவே தடுப்பு சுவர் உயர்த்தி கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால், இந்த பாதையை கடந்து செல்ல 3 கிமீ தூரம் சுற்றிச் செல்லும் நிலையுள்ளது.
நேற்று காட்டூர் பொதுமக்கள், தடுப்புச் சுவரை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.