சேலம் கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில், இடம் பெற்ற புத்தகங்களை ஆர்வத்துடன் படித்த மாணவிகள். படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional03

தனியார் துறையில் 1,670 பேருக்கு வேலைவாய்ப்பு சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் கடந்தாண்டு தனியார் துறை மூலம் 1,670 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.

கண்காட்சி மற்றும் கருத்தரங்கிற்கு, ஆட்சியர் ராமன் தலைமை வகித்து, தொழில் நெறி வழிகாட்டும் கையேட்டினை வெளியிட்டார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 1,982 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

வேலை நாடுநர்களின் பயன்பாட்டுக்காக இணையதள வசதியுடன் கூடிய 20 கணினிகள் கொண்ட நவீன தகவல் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து, பயிற்சிக்கு விண்ணப்பம் செய்து பயனடையலாம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை யும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டில் 1,670 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தங்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டுதல்களுக்கு, மாதிரி தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) ஆ.லதா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் ஓ.செ.ஞானசேகரன், அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.அ.பெத்தாலெட்சுமி, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர்.தே.பிரபாகர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், துணை இயக்குநர் தே.சிவக்குமார், முன்னோடி வங்கி மேலாளர்அ.சீனிவாசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ.மா.ஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT