Regional02

நங்காஞ்சியாறு அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு 6,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் இடையப்பட்டியில் அமைந்துள்ள நங்காஞ்சி அணையில் இருந்து பிப்.4-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை 40 நாட்களுக்கு 192 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து, நங்காஞ்சி அணையிலிருந்து விவசாய பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சியர்கள் (கரூர்) சு.மலர்விழி, (திண்டுக்கல்) மு.விஜயலட்சுமி ஆகியோர் நேற்று தண்ணீரை திறந்துவிட்டனர்.

நங்காஞ்சி அணை தனது மொத்தக் கொள்ளளவான 254.381 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. தற்போது விநாடிக்கு 5 கன அடி வீதம் நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் விநாடிக்கு 50 கன அடி வீதம் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் மூலம் கரூர் மாவட்டத்தில் 3,635 ஏக்கர் நிலங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2,615 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் என்பது குறிப்பி டத்தக்கது.

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் வள்ளியாத்தாள், நங்காஞ்சியாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர்கள் சுஜாதா, சரஸ்வதி, பூபாலன், நாகராஜ், அரவக்குறிச்சி வட்டாட்சியர் பன்னீர்செல்வம், விவசாய சங்க பிரதிநிதிகள் பெரியசாமி, தமிழ், கிருபானந்தன், செல்வராஜ், ராகவனந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT