கருமந்துறை அருகே கைக்கான் வளவு காட்டாற்றின் உபரிநீரை, வீணாகாமல் தடுத்து, கரியகோயில் அணைக்கு திருப்பும் திட்டத்துக்கு தடுப்பணை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை சேலம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருமந்துறை மலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளை சேலம் ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். கருமந்துறை மணியார்குண்டம் பகுதியில் செம்பருத்தி மகளிர் சுய உதவி குழு சார்பில் மண்புழு உரம் உற்பத்தி, மணியார்குண்டம் வலசு வளவு, செர்வபட்டு ஆகிய பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தலா ரூ.7.48 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கிணறு அமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், கருமந்துறையில் உள்ள பழப்பண்ணை வளாகத்தில் ரூ.56.55 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணியையும் ஆட்சியர் ராமன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சின்னகல்வராயன் மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்க கூட்டரங்கில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பயிற்சி முகாமை ஆட்சியர் தொடங்கி வைத்து, 5 விவசாயிகளுக்கு ரூ.4.78 லட்சம் பயிர் கடனுதவிகளை வழங்கினார்.
பின்னர் ஆட்சியர் கூறும்போது, “சின்னக்கல்ராயன் தெற்கு நாடு கிராமத்தில் உள்ள கைக்கான் வளவு காட்டாற்றின் உபரி நீர் வீணாகாமல் தடுத்து, கரியகோயில் அணைக்கு திருப்பும் திட்டத்திற்கு தடுப்பணை மற்றும் கால்வாய் அமைக்கும் பணி ரூ.7.30 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் துரை, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.