ஆத்தூர் அருகே உரிமம் இன்றி ஏரியில் இருந்து மணலை அள்ளி கடத்தியது தொடர்பாக 5 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜேசிபி வாகனம் மற்றும் 60 டன் மணலை பறிமுதல் செய்தனர்.
ஆத்தூர் அடுத்த மணிவிழுந்தான் பகுதியில் உள்ள ஏரியில் உரிமம் இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக மணல் எடுத்து கடத்துவதாக வட்டாட்சியர் அன்புசெழியனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தலைவாசல் போலீஸாருடன் வட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் மணிவிழுந்தான் ஏரியில் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஏரியில் இருந்து உரிமம் இல்லாமல் மணலை லாரிகளில் எடுத்து கடத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து, மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி வாகனம் மற்றும் 60 டன் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தமிழரசன், சதீஷ்குமார், ஷாஜகான், பிரபு, பிரபாகரன் ஆகிய 5 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.