சிஏ தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற இசக்கிராஜுக்கு வாழ்த்து தெரிவித்த அவரது பெற்றோர். 
TNadu

சிஏ தேர்வில் சேலம் மாணவர் தேசிய அளவில் முதலிடம்

செய்திப்பிரிவு

சிஏ தேர்வில் (கணக்கு தணிக்கையாளர்) சேலம் மாணவர் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சேலம் கன்னங்குறிச்சி அருகேஉள்ள சின்ன முனியப்பன் கோயில் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம். இவர் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகன் இசக்கிராஜ். இவர் சேலத்தில் உள்ள சார்ட்டட் அக்கவுண்டண்ட் இன்ஸ்டிடியூட்டில் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சிஏ தேர்வை எழுதினார். முதல்முறையாக சிஏ தேர்வு எழுதிய இவர் 800-க்கு 553 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பெற்றோர் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், அவரது உறவினர்கள், நண்பர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுதொடர்பாக இசக்கிராஜ் கூறியதாவது: 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, எனது பெற்றோர் எனக்கு ஊக்கம் அளித்து, சிஏ தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற வேண்டும் என கூறி வந்தனர். சிஏ தேர்வில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால், அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெறுவேன் என்பதை எண்ணிப் பார்க்கவில்லை.

எனக்கு ஊக்கம் அளித்த பெற்றோர், வழி நடத்திய ஆடிட்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. முதல் மதிப்பெண் பெற்று சேலத்துக்கு பெருமை சேர்த்ததில் எனக்கு மிகழ்ச்சி என்றார்.

SCROLL FOR NEXT