தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 150 மாணவ, மாணவியர் முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்பில் சேர்ந்துள்ளனர். இந்த மாணவர்களுக்கான வகுப்பு அறிமுகநிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமை வகித்தார்.
மருத்துவரான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு சீருடை ஸ்டெதஸ்கோப் போன்ற வற்றை வழங்கி பேசியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் பிறந்தேன்.திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தபோது திருநெல்வேலி எனக்கு பெரிய நகரமாக தெரிந்தது. டெல்லி, லண்டனுக்கு போன மாதிரிஒரு உணர்வு ஏற்பட்டது. மருத்துவ மாணவர்களுக்கு ஒழுக்கமும், பொறுப்புணர்வும் அவசியம்.
நல்ல நண்பர்களை தேடிக் கொள்ளுங்கள். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் தான் உதவுவார்கள்.
உங்களுடன் ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள் உங்களது போட்டியாளர்கள் இல்லை. உங்களது போட்டியாளர்கள் வெளியே இருக்கிறார்கள். அதனை உணர்ந்து நட்போடு பழகுங்கள். இலக்குகளை நிர்ணயித்து, அதை நோக்கிச் செல்லுங்கள். தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றார்.
துணை முதல்வர் கல்யாணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாவலன், துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி பங்கேற்றனர்.