வலையர் வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய முதல்வர் பழனிசாமி. உடன் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, விஜயபாஸ்கர், வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கத் தலைவர் செல்வக்குமார். படம்:ஆர்.அசோக் 
TNadu

முத்தரையர் மக்களின் மேம்பாட்டுக்காக வலையர் புனரமைப்பு வாரியம் அமைக்கப்படும் மதுரை மாநாட்டில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

முத்தரையர் மக்களின் மேம்பாட்டுக்காக வலையர் புனரமைப்பு வாரியம் அமைக்கப்படும். மதுரை வலையங்குளம், ஆணையூரில் பெரும்பிடு முத்தரையர் சிலை திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறினார்.

மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் வலையர் வாழ்வுரிமை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: கலை, இலக்கிய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்கள் முத்தரையர்கள். மண்ணையும், மக்களையும் காக்கும் விவசாயிகளாக முத்தரையர்கள் விளங்குகின்றனர்.

பெரும்பிடுகு முத்தரையரின் வீரத்தைப் பெருமைப்படுத்த திருச்சியில் 1996-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிலை அமைத்தார். தற்போது ரூ.1 கோடி செலவில் பெரும்பிடுகு முத்தரையரின் முழு உருவச் சிலை, நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க பணிகள் நடைபெறுகின்றன. மதுரையில் வலையங்குளம், ஆனையூரில் பெரும்பிடுகுமுத்தரையர் சிலைகள் அமைக்கப்படும். முத்தரையர் சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக வலையர்புனரமைப்பு வாரியம் அமைக் கப்படும். முத்தரையர் சமுதாய மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு அரசு துணை நிற்கும்.

காவிரி விவசாயிகள் நலனுக்காக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் காவிரி வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. காவிரி நதி மாசுபடுவதைத் தடுக்க காவிரி தொழில்நுட்பத் திட்டம் நிறைவேற்றப்படும். கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். கல்லணை கால்வாய் மேம்பாட்டுப் பணி விரைவில் தொடங்கப்படும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடித்தளமாக விளங்கியது அதிமுக அரசு. இவ்வாறு முதல்வர் பேசினார்.

SCROLL FOR NEXT