Regional01

தூத்துக்குடியில் 11 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் வழக்கம்போல் மக்கள் குறைதீர் கூட்டம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 மாதங்களுக்கு பிறகு இன்று (பிப்.1) முதல் மீண்டும் வழக்கம்போல மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும். மக்கள் பங்கேற்று மனுக்கள் அளிப்பர். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் நேரடியாக பங்கேற்கும் குறைதீர் நாள் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

கடந்த நவம்பர் மாதம் முதல் காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

மக்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளித்துவிட்டு, அங்கிருந்து காணொலி காட்சி மூலம் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் குறைகளைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று (பிப்.1) முதல் மீண்டும் பழையபடி மக்கள் நேரடியாக மனுக்களை அளிக்கும் வகையில் வழக்கமான குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: இன்று (பிப்.1) முதல் ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறைதீர் நாள் கூட்டம், ஏற்கெனவே இருந்த நடைமுறை அடிப்படையில் வழக்கம்போல நடைபெறும்.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து கலந்துகொள்ள வேண்டும். ஆதார் அட்டை மற்றும் செல்போன் அவசியம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து கலந்துகொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT