தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கடல்சார் உணவுப்பொருள் வணிக மையத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடியில் உள்ள மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையத்தில் கடல்சார் உணவுப்பொருட்கள் வணிகமையம் செயல்படுகிறது. புதிய கடல்சார் உணவுப்பொருட்கள் தயாரிப்புக்கான தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தல், அவற்றை மக்களிடையே கொண்டு சேர்த்தல், அதன் மூலமாக தொழில்முனைவோரையும், வேலைவாய்ப்பையும் உருவாக்குதல் ஆகியவை இந்த மையத்தின்நோக்கம். மையத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி மீன்வளக் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் பா.சுந்தரமூர்த்தி வரவேற்றார். மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.சுகுமார், ஆராய்ச்சி இயக்குநர் பு.ஜெயசேகரன், மாவட்ட கூடுதல் ஆட்சியர் விஷ்ணுசந்திரன் ஆகியோர் பேசினர்.
மையத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தொழில் முனைவோருக்கான அலுவலக வளாகத்தை துணைவேந்தர் சுகுமார் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி மற்றும் திருச்சியில் உள்ள பிஷப் ஹூபர் கல்லூரி ஆகியவற்றுடன், கடல்சார் உணவுப்பொருள் வணிகமையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.