திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு ஊராட்சியில் நேற்று நடந்த மக்கள் தரிசனம் நிகழ்ச்சியில் எம்எல்ஏ பன்னீர்செல்வத்திடம் மனுக்களை வழங்கிய பொதுமக்கள். 
Regional01

கலசப்பாக்கம் தொகுதியில் மக்கள் தரிசனம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட படைவீடு உட்பட 7 ஊராட்சிகளில் மக்கள் தரிசனம் நிகழ்ச்சியை பன்னீர்செல்வம் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார்.

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு அவர் பேசும்போது, “மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, சட்டப்பேரவையில் குரல் கொடுத்து, கலசப்பாக்கம் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.

விவசாயிகளின் பிள்ளைகள் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது. ராணுவம் மற்றும் காவல்துறை பணிக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆதரவற்ற முதியோர்களை பாதுகாக்க, முதியோர் இல்லம் தொடங்கவுள்ளேன்.

மக்கள் தரிசனம் மூலம் உங்களோடு ஒருவனாக தங்கி உங்களுடைய குறைகளை கேட்டறிந்து குறைகளைத் தீர்ப்பது எனது கடமை. பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றமாணவர்களுக்கு தங்கச்சங்கிலி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கலசப்பாக்கம் தொகுதியில் மகளிர் கலைக் கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வரப்படும். அதற்கான அரசாணையை முதல்வர் பழனிசாமி விரைவில் பிறப்பிக்கவுள்ளார்” என்றார்.

இதில், பொதுக்குழு உறுப்பினர் பொய்யா மொழி, ஜவ்வாதுமலை ஒன்றிய குழு தலைவர் ஜீவா மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் வெள்ளையன், முன்னாள் அரசு வழக்கறிஞர் செம்பியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

SCROLL FOR NEXT