சேலத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் 112-வது பொதுப்பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் பேசினார். அருகில் எம்எல்ஏ.க்கள் வெங்கடாசலம், மனோன்மணி, ராஜா, வெற்றிவேல், மருதமுத்து, சித்ரா உட்பட பலர் உள்ளனர். படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional01

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 112-வது ஆண்டு பொதுப் பேரவை கூட்டம்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 112-வது பொதுப் பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவன் தலைமைதாங்கிப் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் 2016 – 2021 வரை 5 ஆண்டு காலத்தில் 10,83,604 விவசாயிகளுக்கு ரூ.6653.21 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆட்சியாளர்களின் காலத்தை விட தற்போது ரூ.5,703.98 கோடி அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கடந்த 8 ஆண்டுகளாக மாநிலத்தில் சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்டு, தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகை 2011-ம் ஆண்டில் ரூ.1,611.18 கோடியாக இருந்தது. தற்போது ரூ.3,525.93 கோடி வைப்புத்தொகையுடன் இந்த வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த (2020-21) ஆண்டில் மட்டும் வைப்புத்தொகை 1,914.75 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 74 கிளைகள் உட்பட 1,976 உறுப்பினர்களைக் கொண்டு, 112 ஆண்டுகளாக சிறப்பாக தொடர்ந்து லாபத்தில் செயல்பட்டு வருகின்றது.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள், விவசாயப் பெருமக்கள், வணிக பெருமக்கள், சாலையோர வியாபாரிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் தேவையான கடனுதவிகளை தடையின்றி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கி வருகிறது. கடன் பெறுவோரும் தங்களின் வளர்ச்சிக்காகவும், வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் இக்கடனுதவிகளை பயன்படுத்திக் கொள்வதோடு, பெறுகின்ற கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தி சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வளர்ச்சிக்கும், உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் 20 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,13,65,000 கடனுதவியை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் வழங்கினார். இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவர் நடேசன், சேலம் ஆவின் தலைவர் ஜெயராமன், எம்எல்ஏ.க்கள் வெங்கடாசலம், மனோன்மணி, ராஜா, வெற்றிவேல், மருதமுத்து, சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT