தஞ்சாவூரில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகத்துக்கு, வரி ஆலோசகர்கள் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் வரி ஆலோசகர்கள் கூட்டமைப்புத் தலைவர் கணேசன், தொழில் மற்றும் வணிக கூட்டமைப்புத் தலைவர் என்.டி.பாலசுந்தரம், செயலாளர் ஆனந்தன், பொருளாளர் சுந்தரநாராயணன் மற்றும் ஆடிட்டர்கள், வணிகர்கள் நேற்று வந்தனர். அவர்கள், சரக்கு மற்றும் சேவை வரி உதவி ஆணையர் சுரேஷ்குமார் மீனாவிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
வரி ஆலோசகர்களுக்கென தனி நலவாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். ரிட்டன் தாக்கல் செய்வதை எளிமைப்படுத்த வேண்டும். அனைத்து ரிட்டன் படிவத்திலும் குறிப்பு எழுத தனிக் காலம் ஒதுக்க வேண்டும். சிறு, குறு வியாபாரிகளுக்கு தாமதக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். வணிகர்கள் முறையாக வரிசெலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜிஎஸ்டி இணையதளத்தை எளிதாக கையாள மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரியில் தொடர்ச்சியாக உள்ள மாற்றங்கள், அதிக அபராத வட்டி, ஜிஎஸ்டி இணையதள பிரச்சினை உள்ளிட்ட குறைபாடுகளை மத்திய அரசு களைய வேண்டும் என தெரிவித்திருந்தனர். பின்னர், அலுவலகத்துக்கு வெளியே வந்த அவர்கள், ஜிஎஸ்டியில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.