சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ‘நம்ம சென்னை’ அடையாள சிற்பத்தை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி, மிதிவண்டி பகிர்மான திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாட்டிலேயே முதல்முறையாக மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து கொள்கையை சென்னை பெருநகர மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. மோட்டார்வாகனம் அல்லாத போக்குவரத்துக் கொள்கையை ஊக்குவிக்கும் வகையில், சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மிதிவண்டி பகிர்மானத் திட்டம் முதல்வர் பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இத்திட்டம் ரூ.9 கோடியே 50 லட்சம் முதலீட்டில் 378 மிதிவண்டி நிலையங்களில் 5 ஆயிரம் மிதிவண்டிகளுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டு தற்போது 78 நிலையங்களில் 500 மிதிவண்டிகளுடன் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடன் செயல்பட்டு வருகிறது. இதில் மேலும் ஒருமைல்கல்லாக சென்னை மாநகராட்சி சார்பில் 500 இ-மிதிவண்டிகள் மற்றும் 500 அடுத்த தலைமுறைக்கான மிதிவண்டிகள் என மொத்தம்ஆயிரம் மிதிவண்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த மிதிவண்டிகள் குறைந்தமனித சக்தியில் மின்கலம் மூலம்அதிவேகமாக இயங்கும் திறன்கொண்டது. அலுமினிய அலாய்தொழில் நுட்பத்தில், குறைந்த பராமரிப்பில், மிகவும் இலகுவாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘நம்ம சென்னை’ சிற்பம்
சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரையில் சென்னையின் பெருமை, மாண்பை கொண்டாடும் விதத்திலும், பொதுமக்கள் தாங்களே புகைப்படம் எடுத்து (செல்ஃபி) சென்னை மாநகரத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக ‘எஸ்டி பிளஸ் ஆர்ட் இந்தியா ஃபவுண்டேஷன்’ நிறுவனம் மூலம் ‘நம்ம சென்னை’ என்ற அடையாள சிற்பம் காமராஜர் சாலை, ராணி மேரி கல்லூரி எதிரில் ரூ.24 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள சிற்பத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த சிற்பம், சென்னையில் ஒருமுக்கிய அடையாளமாக திகழும்.டெல்லி, ஐதராபாத், பெங்களூருநகரங்களில் உருவாக்கப்பட்டுள்ளசிற்பங்களின் தொடர்ச்சியாக சென்னையில் தற்போது ‘நம்ம சென்னை’அடையாள சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத்தலைவர் பி.தனபால் மற்றும் அமைச்சர்கள், தலைமைச்செயலர் கே.சண்முகம், நகராட்சி நிர்வாக செயலர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.