திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே மலைக்கோயிலில் உள்ள முருகன் கோயிலில் நேற்று தைப்பூச விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மக்கள் வருகை காரணமாக, அப்பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேரோட்டத்தின்போது அங்குள்ள விநாயகர் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த எரிவாயு நிரப்பும் பலூன் கடையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு உருளை திடீரென வெடித்து சிதறியது.
இதில், கோயிலுக்கு வந்தவர்களில் ஹர்சிதா (8), ஹரிபிரசாத் (28) மற்றும் பலூன் கடைக்காரரான நடராஜன் (36) ஆகியோர் காயமடைந்தனர்.
கோவை அரசு மருத்துவமனைக்கு நடராஜன் அழைத்துச் செல்லப்பட்டார். சிறுமி மற்றும் இளைஞர் இருவரும், அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.