மரக்காணம் பகுதியில் ‘ஸ்மார்ட் போன்’ தருவதாக ஆன்லைன் மூலம் சிலரிடம் பணமோசடி நடந்துள்ளது.
மரக்காணம் பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் சிலரின் செல் போனுக்கு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், ‘உங்களது செல் போன் எண்ணுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்க குலுக்கல் நடத்தினோம். அதில், உங்களுக்கு 2 கிராம் தங்க வளையல் பரிசாக விழுந்துள்ளது. இதை வாங்க வேண்டும் என்றால்,அஞ்சல் செலவாக ரூ. 600 செலுத்த வேண்டும்.’ என்று கூறியுள்ளனர்.
அதை நம்பி, சிலர் ஆன் லைனில் ரூ.600 செலுத்தியுள்ளனர். ஆனால், வந்தபார்சலில், கவரிங் வளையல்கள் மட்டுமேஇருந்தன. மரக்காணம் பகுதியில் 10க்கும்மேற்பட்டோர் இது போல் ஏமாந்துள்ளனர்.
இது குறித்து மரக்காணத்தைச் சேர்ந்தசையத் ஹமீத் என்பவர் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள் ளார். இதற்கிடையே, இதே பாணியில் கடந்த 3 நாட்களுக்கு முன் மரக்காணம் பகுதியில் வசிக்கும் சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய இளம்பெண்கள், ‘எங்கள் நிறுவனத்தின் மூலம் நடத்திய குலுக்கலில், உங்களுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் பரிசாக விழுந்துள்ளது. இதைப் பெற ரூ. 2,500 மட்டும் செலுத்தினால் போதும்’ என்று கூறியுள்ளனர். அவர்கள் கூறியதைக் கேட்டு சிலர், பணத்தைச் செலுத்த, குறிப்பிட்டபடி பார்சலும் வந்துள்ளது. அதில், ரூ.200 மதிப்புள்ள காய்கறி வெட்டும் கருவி இருந்துள்ளது.
இதில், பாதிக்கப்பட்ட மரக்காணம் அருகே கந்தாடு பகுதியைச் சேர்ந்த பாலு என்பவர் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுபோன்ற அழைப்புகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.