ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் 14 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 63 பவுன் நகையை மீட்டுள்ளனர்.
ஈரோடு ஈபிபி நகரில் வசிக்கும் செந்தில்குமார் என்பவரது வீட்டில் கடந்த 13-ம் தேதி 47 பவுன் நகை திருட்டு போனது. இதேபோல், ஆசிரியர்காலனி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வீட்டில் 16-ம்தேதி 16 பவுன் நகை திருட்டு போனது. வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து இரு திருட்டுச் சம்பவங்களும் நடந்துள்ளன. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு சம்பத்நகர் பகுதியில் நேற்று முன் தினம் வாகனத்தணிக்கையில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் வடக்கு காந்திகிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (41) என்பதும், ஈரோட்டில் இரு திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷைக் கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து 63 பவுன் நகையை மீட்டனர்.
இதுதொடர்பாக தனிப்படை போலீஸார் கூறியதாவது:
விக்னேஷ் மீது கரூர், சேலம் மாவட்டங்களில் தலா 5 திருட்டு வழக்குகளும், ஈரோட்டில் 4 திருட்டு வழக்குகளும் உள்ளன.
பகலில் இரு சக்கர வாகனத்தில் சென்று பூட்டிய வீடுகளை நோட்டமிடுவதும், இரவில் திருடுவதிலும் விக்னேஷ் ஈடுபட்டுள்ளார். திருடிய நகைகளை விற்றும், வங்கியில் அடமானம் வைத்தும் பணம் பெற்று செலவு செய்து வந்துள்ளார், என்றனர்.