Regional01

தைப்பூசத்தையொட்டி குளித்தலையில் 8 ஊர் சுவாமிகள் சந்திப்பு

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கடம்பர்கோயில் முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பனேஸ்வரர், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்தியார்ஜூனேஸ்வரர், பேட்டைவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியார்ஜூனேஸ்வரர், அய்யர்மலை சுரும்பார்குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாசலேஸ்வரர், முசிறி கற்பூரவள்ளி உடனுறை சந்திரமவுலீஸ்வரர், வெள்ளூர் சிவகாமி உடனுறை திருக்காமேஸ்வரர், கருப்பத்தூர் சுகந்த குந்தாளம்பிகை உடனுறை சிம்மபுரீஸ்வரர் ஆகிய 8 ஊர் கோயில்களைச் சேர்ந்த சுவாமிகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருள செய்யப்பட்டு, குளித்தலை கடம்பர் கோயிலுக்கு எடுத்து வரப்பட்ட அங்கு கோயில் பிரகாரத்தில் 8 ஊர் சுவாமிகள் சந்திப்பு நடைபெற்றது.

பின்னர், தீர்த்தவாரிக்காக காவிரிக் கரையில் சுவாமிகள் எழுந்தருளினர். அப்போது தீர்த்தவாரி நடைபெறும் இடத்தில் காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் ஆற்றுக்குள் இறங்கிவிட்டதால், தீர்த்தவாரிக்கு அஸ்திர தேவர்களுடன் வந்த 8 ஊர் சிவாச்சாரியார்கள் ஆற்றுக்குள் இறங்க முடியவில்லை. இதனால், சிவாச்சாரியார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் போலீஸாரால் பக்தர்களை ஆற்றிலிருந்து வெளியேற்ற முடியாததால், குறுகிய பகுதியில் ஆற்றுக்குள் இறங்கிய சிவாச்சாரியார்கள் அஸ்திரதேவர்களுடன் நீரில் மூழ்கி தீர்த்தவாரி காணாமல், ஆற்று நீரை தலையில் தெளித்து கொண்டு கரையேறினர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் காவிரியில் நீராடி கடம்பன் துறையில் வைக்கப்பட்டிருந்தத 8 ஊர் கோயில் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT