Regional02

கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 64 மீனவக் கிராம மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

செய்திப்பிரிவு

நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த மகா காளியம்மன் கோயிலில் புனரமைப்பு திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 25-ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.

பின்னர், நாகை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, யானை மீது புனிதநீர் வைக்கப்பட்டு, ஊர்வலமாக மகா காளியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு பூர்ணாஹூதி தீபாராதனைகள் நடைபெற்று வந்தன.

கடந்த 26-ம் தேதி 2, 3-ம் கால யாகசாலை பூஜையும், நேற்று முன்தினம் 4, 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

தொடர்ந்து, நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னர், மேளதாள வாத்தியங்களுடன் கடங்கள் புறப்பட்டு, ஆலயத்தைச் சுற்றி எடுத்துவரப்பட்டன. பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, காளியம்மன் கோயிலின் கோபுரக் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இருந்து 64 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT