சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் இருமுறை போட்டியிட்ட வி.வி.செந்தில்நாதன் நேற்று பாஜகவில் இணைந்தார்.
அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் செந்தில்நாதன். கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2019-ல் அரவக்குறிச்சியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியிடம் தோல்வி அடைந்தார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் கடும் அதிருப்தியில் இருந்த செந்தில்நாதன் நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார். அண்ணாமலையின் முயற்சியால்தான் செந்தில்நாதன் பாஜகவில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.