Regional02

‘காங்கிரஸிலிருந்து யாரும் விலக மாட்டார்கள்’

செய்திப்பிரிவு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் காந்தி மார்க்கெட் வளாகத்தில், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அடிக்கல் நாட்டினார். இதில், மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், முதல்வர் வி.நாராயணசாமி காரைக்காலில் செய்தியாளர்களிடம் கூறியது: முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம் கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்காக பல காரணங்களை கூறிவருகிறார். அவர் மட்டுமின்றி எந்த அமைச்சரின் துறை சார்ந்த நடவடிக்கைகளிலும் நான் தலையிட்டதில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். ஆனால், மத்திய அரசுதான் எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது. சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. உரிய முடிவுகளை கட்சித் தலைவர்கள் எடுப்பார்கள். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கீழ்மட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே விலகிச் சென்றுள்ளனர். இனி காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் யாரும் கண்டிப்பாக கட்சியிலிருந்து விலகமாட்டார்கள். பாஜகவுக்கு செல்வோரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என்றார்.

SCROLL FOR NEXT