தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை போகி பண்டிகை அன்று சுத்தப்படுத்தும் வகையில் ‘தூய்மையான தூத்துக்குடி' என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் அறிவித்தார். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மெகா தூய்மை பணியில், ஒரே நாளில் 617 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
இத்திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறந்த நகராட்சியாக கோவில்பட்டி தேர்வு செய்யப்பட்டு, நகராட்சி ஆணையர் ராஜாராமிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறந்த அலுவலகமாக தேர்வு செய்யப்பட்ட தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கான சான்றிதழ்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் விநாயகம் (தூத்துக்குடி), நெடுஞ்செழியப்பாண்டியன் (கோவில்பட்டி) ஆகியோரிடம் வழங்கப்பட்டன.
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ப.குற்றாலிங்கம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஒருங்கிணைப்பாளர் மா.செந்தில் குமார், வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
சிறந்த ஊராட்சி ஒன்றியமாக தேர்வு செய்யப்பட்ட புதூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலர் தங்கவேல், சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்ட நட்டாத்தி ஊராட்சித் தலைவர் பி.சுதாகலா, வாதலக்கரை ஊராட்சித் தலைவர் சீதாலட்சுமிஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிறந்த மகளிர் குழுவாக தேர்வான குமாரகிரி நிலா சுய உதவிக்குழுவுக்கும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களாக காமராஜ் கல்லூரி ஆ.தேவராஜ், நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி எம்.பியூலா ஹேமலதா, தன்னார்வலர்கள் அஸ்வதி, முத்துமுருகன் ஆகியோருக்கும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.