ஓமன் நாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விக்டோரியா மற்றும் அவரது குடும்பத்தார். 
Regional01

ஓமன் நாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தருக விழுப்புரம் ஆட்சியரிடம் பெண் மனு

செய்திப்பிரிவு

ஓமன் நாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி விழுப் புரம் ஆட்சியரிடம் பெண் ஒருவர் மனு அளித்தார்.

விழுப்புரம் அருகே தெளி கிராமத்தைச் சேர்ந்த மரிய அந்தோணி லூர்துசாமி மனைவி விக்டோரியா என்பவர் ஆட்சியர் அண்ணாதுரையிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

என் கணவர் மரிய அந்தோணி லூர்துசாமி ஓமன் நாட்டில் உள்ள கார் தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வேலைக்கு சென்றார். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பச் சூழல் காரணமாக என் கணவர், பணியாற்றிய நிறுவனத்தில் கடந்த 18-ம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்தார். நிறுவனம் ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை. கடந்த 25-ம் தேதி என் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக ஓமன் நாட்டில் உள்ள நிறுவனத்திலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றேன். என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார் என தெரியவில்லை.

கணவரின் உடலை கார் நிறுவனத்தின் செலவில் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய இழப்பீடு பெற்றுத்தரவும் நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT