மதுரை மாகாளிப்பட்டியைச் சேர்ந்த மணிபாரதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
நாடு முழுவதும் 12 இடங்களில் தோல் வங்கிகள் உள்ளன. இந்தத் தோல் வங்கிகளில் சேகரிக்கப்படும் தோலை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். தீக்காயத்தால் பாதிக் கப்பட்டவர்களுக்கு தோல் வங்கி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
அரசு ராஜாஜி மருத்துவமனை யில் 2016-ல் மத்திய அரசுடன் இணைந்து ரூ.6.57 கோடி செலவில் தீக்காயப் பிரிவு மற்றும் தோல் சேமிப்பு வங்கி தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் கட்டமாக ரூ.3.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அரசு ராஜாஜி மருத்துவ மனை யில் 2018 முதல் 2023 வரை தோல் சேகரிப்பு வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வரை தோல் வங்கி தொடங்கவில்லை.
மதுரையில் தோல் வங்கி தொடங்கினால் 5 மாவட்ட மக்கள் பயனடைவர். இதேபோல் சென்னை கீழ்பாக்கம் மருத்துவ மனையில் இருப்பதுபோல் மதுரை, நெல்லை அரசு மருத்துவ மனைகளில் ரத்தம், தோல், எலும்பு, இதய வால்வுகளைப் பாதுகாக்கும் பயோ மெட்டீரியல் மையங்கள் அமைக்க வேண்டும். எனவே, மதுரை, நெல்லை அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்டீரியல் மையமும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகு மணி வாதிட்டார்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், மதுரையில் தோல் வங்கி தொடங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித் தும், அரசு மருத்துவ மனைகளில் பயோ மெட்டீரியல் மையங்கள் அமைப்பது குறித்தும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.