சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை தரக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறையின் புலனாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என சேலம் திமுக எம்பி பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சேலம் மாநகராட்சி செயற்பொறியளர் அசோகனிடம் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் மாநகராட்சி நிர்வாகம் முறையான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி உதவியுடன் ரூ.1,000 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை நான் ஆய்வு செய்து, தரமற்ற பணிகள் நடைபெறுவதாக தொடர்புடைய பொறியாளர்களிடம் புகார் தெரிவித்திருந்தேன்.
இப்பணிகள் தொடர்பாக எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். ஆனால், ஆய்வுக் கூட்டம் நடத்தவில்லை. மேலும், இப்பணிகளை தரக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையின் புலனாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் அதிகம் கூடும் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் தினசரி 3 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
முன்னாள் ஆணையர் பணிக்காலத்தில் விடப்பட்ட டெண்டர்கள், பணி நியமனங்கள் தொடர்பான ஆவணங்கள் மறைக்காமல் வைத்திருக்க வேண்டும். மாநகராட்சி ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என புகார்கள் வருகின்றன. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அம்மா உணவகத்துக்கு செலவிடும் நிதியை தமிழக அரசிடம் இருந்து பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.