Regional02

கண்ணில் கருப்பு துணி கட்டி காங்கயத்தில் விவசாயிகள் போராட்டம்

செய்திப்பிரிவு

உயர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காங்கயம் அருகே 7-ம் நாளாக தொடர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர் மின்கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூரில் கடந்த 20-ம் தேதி தொடங்கப்பட்டது.

இதில், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் உயர்மின் வழித்தட திட்டத்தை சாலையோரம் புதைவடமாக (கேபிள்) அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் திட்டம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கயத்தில் 7-வது நாளாக நேற்றும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் ஈசன் தலைமை வகித்தார்.

அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி டிராக்டர்களை போராட்ட களத்தில் நிறுத்தி, கண்ணில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினர்.

பட விளக்கம்

காங்கயம் அருகே கண்களில் கருப்பு துணி கட்டி நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

SCROLL FOR NEXT