Regional02

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய ரூ.5 லட்சம் நிதி வழங்க கோரிக்கை

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்துக்கு உட்பட்ட அலகுமலை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் தூயமணி. இவர், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு விவரம்:

அலகுமலை ஊராட்சியில் 31-ம் தேதி மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளையர் நலச்சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் விழா நடைபெறுகிறது. இப்போட்டியை நடத்த ஊராட்சி நிர்வாகத்திடம் முறைப்படி, எந்த அனுமதியும் பெறப்படவில்லை, எந்த தகவலும் தெரிவிக்கப்படவும்இல்லை. இந்த விவகாரத்தில் முறைப்படி ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற தேவை இல்லையா, கரோனா பரவல் காலத்தில் இப்போட்டி நடைபெறுவதால் அலகுமலை ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். இத்தகவலை இந்த கடிதம் மற்றும் மனு மூலமாக ஆட்சியருக்கு தெரியப்படுத்துகிறேன். மேலும், ஜல்லிக்கட்டு நடைபெறு வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் சிறப்பு நிதியில் இருந்தோ அல்லது போட்டி நடத்தும் கமிட்டியிடம் இருந்தோ ரூ.5 லட்சம் ஊராட்சிக்கு விரைவாக வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT