தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் தயானந்தன், செயலாளர் ச.முருகதாஸ் ஆகியோர் தலைமையிலான வருவாய்த் துறையினர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல்ஹமீதிடம் அளித்த மனு:
வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை உள்ள அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கவேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட வர்களது பணியை வரன்முறை செய்யும் அதிகாரத்தை, ஆட்சியர் களுக்கு வழங்க வேண்டும்.
பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வை உத்தரவாதம் செய்து, உடனடியாக தீர்வு காண வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி, சரண்டர் விடுப்புகளை உடனடியாக வழங்க வேண்டும். கோரிக்கைகளை தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கோரிக்கைகளை வலியுறுத்திவரும் 27-ம் தேதி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டமும், பிப். 6-ம் தேதி சேலத்தில் கோரிக்கை மாநாடும், பிப்.17-ம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.