நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நீர் மேலாண்மை நதிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைப்பது தொடர்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் பணித்தளப் பொறுப்பாளர்களுக்கு திறன் மேம்பாடு தொடர்பான பயிற்சி வகுப்பு நடந்தது.
கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியர் ராமன் பேசியதாவது:
நீர் மேலாண்மை நதிகள் புனரமைப்பு திட்டத்தின் முக்கிய நோக்கம், நீர்வரத்து கால்வாய்களில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்வதாகும். இத்திட்டம் மூலம் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தேவையான நீர் கிடைக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
நதிகள் புனரமைப்பு மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது. இத்திட்டப்பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 39 பணித்தளப் பொறுப்பாளர்களுக்கு வாழும் கலை அமைப்பின் வியக்தி விகாஸ் கேந்திரா மூலமாக 5 நாட்கள் திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தங்களது பணியினை சிறப்பாகவும் மற்றும் தன்னார்வத்துடன் மேற்கொள்வது குறித்தும், பணியாளர்களை ஊக்குவிக்கும் திறன்கள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.
நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 9 ஊராட்சிகளில் 13 நீர் செறிவூட்டும் கிணறுகள் மற்றும் கேபியன் தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலை உறுதித்திட்டத்தின் வேலை அட்டை வைத்திருப்பவர்களுக்கு 100 நாள் திட்டப்பணியில் ஈடுபடுத்தப்படுவோருக்கும் திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், செயற் பொறியாளர் சடையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.