ஆத்தூரில் போலீஸ் ஏட்டை தாக்கிவிட்டு தப்பிய கைதியை போலீஸார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்கரவர்த்தி (23), சவுந்தரராஜன் (27). இவர்கள் இருவரையும் ஒரு வழக்கு தொடர்பாக நாமக்கல் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவருக்கும் சின்னசேலம் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளது. இருவரையும் நாமக்கல் போலீஸார் கைது செய்த தகவல் அறிந்த சின்னசேலம் எஸ்ஐ சுப்பிரமணியம் மற்றும் ஏட்டு முகமது முஸ்தபா, சிவராமன் ஆகியோர் நேற்று முன்தினம் நாமக்கல் வந்தனர்.
சின்னசேலத்தில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்பு டைய சக்கரவர்த்தி மற்றும் சவுந்தரராஜன் ஆகியோரை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருவரையும் போலீஸார் ஆத்தூர் செல்லும் பேருந்தில் அழைத்துச் சென்றனர்.
ஆத்தூர் பேருந்து நிலையம் வந்ததும் இருவரையும் போலீஸார் கீழே இறக்கிவிட்டு, கள்ளக்குறிச்சி பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என சக்கரவர்த்தி கூறியுள்ளார். இதை யடுத்து, ஏட்டு முகமது முஸ்தபா, சக்கரவர்த்தியை கழிப்பறைக்கு அழைத்து சென்றார். அப்போது, முகமது முஸ்தபாவை தாக்கிவிட்டு சக்கரவர்த்தி அங்கிருந்து தப்பினார். இதில், முகமது முஸ்தபாவுக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர்.