விபத்தை ஏற்படுத்தி கணவர் இறக்க காரணமாக இருந்த வாகனத்தை கண்டு பிடிக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த உறவினர்களுடன் சேர்ந்து சேலத்தில் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
திருச்சி மாவட்டம், முசிறி தாத்தங்கையார் பேட்டையைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் (49). இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ரமேஷ், மீண்டும் வீடு திரும்பவில்லை. அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரமேஷ் சாலை விபத்தில் இறந்து விட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ரமேஷ் மீது மோதிய வாகனத்தை கண்டு பிடித்து, நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் அலுவலகத்தில் ரமேஷின் உறவினர்கள் புகார் அளித்தனர். இந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து, ரமேஷின் மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்கள் பத்து பேர் திருச்சியில் இருந்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்வர் வீட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் இருக்க வந்தனர். தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் தலைமையிலான போலீஸார், ரமேஷின் உறவினர்களை தடுத்து நிறுத்தினர். திருச்சியில் உள்ள காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும்படி போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.