Regional01

ஏரிக்கரையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து பெண்கள் இருவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஆத்தூரை அடுத்த தலைவாசல் அருகே ஏரிக்கரையில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில், 2 பெண்கள் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.

தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 30 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கல்லாநத்தம் கிராமத்துக்கு சரக்கு வாகனம் ஒன்றில், துக்க நிகழ்வுக்கு புறப்பட்டனர். சேலம் மாவட்ட எல்லையான ஊனத்தூர் கிராமம் வழியாகச் சென்றபோது, அங்குள்ள ஏரிக்கரையில் இருந்து சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில், புத்தூரைச் சேர்ந்த கருப்பன் என்பவரது மனைவி அன்னபூரணி (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில், 24 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆத்தூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் புத்தூரைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி வேடம்மாள் (55) என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார். 4 பேர் படுகாயத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தலைவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 24 பேர் காயமடைந்ததால், புத்தூர் கிராமம் சோகத்தில் ஆழ்ந்தது.

SCROLL FOR NEXT